ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 காவல்துறை உயர் அதிகாரிகள் சுட்டுக் கொலை

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 காவல்துறை உயர் அதிகாரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

                ஷோபியான் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகளும், 1 காவலரும் நேற்று இரவு மாயமாகினர். அவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந் நிலையில், மாயமான 2 உயர் அதிகாரிகளும், 1 காவலரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரரைக் கடத்திச் சென்று அவரது கழுத்தை அறுத்து கொன்றனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இன்று காவல்துறையைச் சேர்ந்த 3 பேரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். இதையடுத்து பயங்கரவாதிகளைத் தேடும் பணி ஷோபியான் மாவட்டத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.  அண்மை காலமாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். கல்வீச்சு சம்பவங்கள், போராட்டமும் குறைந்துள்ளதால், விரக்தி அடைந்த பயங்கரவாதிகள், காவல்துறையினரை குறிவைத்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகி வரும் நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறிச்செயல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts