ஜம்மு-காஷ்மீர், நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை: எதிர்க்கட்சிகள் கண்டனம்

 காஷ்மீர் மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி  அமலில் உள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகன வரிசையின்மீது கடந்த பிப்ரவரி மாதம் 14ந் தேதி  அன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலுக்கு பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.  விரைவில் அங்கு மக்களவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்திய ஆளுநர் சில முக்கிய முடிவுகளை அறிவித்தார். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி இடங்களில் இருந்து காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது எனவும், இந்நிலையில், முன்னர் புல்வாமாவில் நிகழ்ந்ததுபோல் பாதுகாப்பு படையினர் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் இருக்க ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் 370 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். . இதையடுத்து கடந்த 2நாட்களாக இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சலையில் பொது வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடைக்கு அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல் அமைச்சர் பரூக் அப்துல்லா, இந்த தடையால் வர்த்தகர்கள் பெருமளவிலான பாதிப்பு அடைந்துள்ளனர் எனவும்  சர்வாதிகாரத்துக்கு இணையான இந்த தடையால், சரக்கு லாரிகள் சரியாக சென்றுவர முடியாத நிலையில், உணவுப் பொருள் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை முன்னாள் முதல் அமைச்சர் மெகபூபா முப்தியும் பிரதிபலித்துள்ளார். இந்த மாநிலத்துக்குட்பட்ட சாலைகளை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை இங்குள்ள மக்களுக்கு உள்ளதாக தெரிவித்தார்.  மேலும், காஷ்மீர் மக்களின் அடிப்படை சுதந்திரத்தை பறிக்கும் இந்த தடை உத்தரவால் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும். அவசியம் ஏற்பட்டால் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் மெஹபூபா முப்தி எச்சரித்தார். .

Related Posts