ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தமிழக அரசு தவறான முறையில் கையாளுகிறது: டிடிவி தினகரன்

 

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தமிழக அரசு தவறான முறையில் கையாளுகிறது என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 “புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டியும் மற்றும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய 21 மாத ஊதிய நிலுவையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், இந்த அரசு செவி சாய்க்காத காரணத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தை இன்று அறிவித்திருந்தார்கள். இந்நிலையில், போராட்ட சங்கங்களின் தலைவர்களையும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களை நேற்றே முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பேரில் பேருந்து நிலையங்களிலும், சுங்கச்சாவடிகளிலும் கைது செய்தது அநாகரீகமானச் செயல்.

அனைத்து பத்திரிக்கைகளிலும் அமைச்சர் ஜெயக்குமாரின் வேண்டுகோள் செய்தியினையும் வெளியிட்டு, இப்போராட்டத்தை நீர்த்துபோகச் செய்ய முயன்றுள்ளது தமிழக அரசு. ஆனால், உண்மையிலேயே இப்போராட்ட அறிவிப்பு தொடர்பாக அரசு ஊழியர்களையும், அரசு பள்ளி ஆசிரியர்களின் அமைப்பைச் சார்ந்தவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கவேண்டும்.

வீதிக்கு வந்து போராடுவதென்பது அவர்கள் நியாயமான கோரிக்கைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் காரணத்தால்தான்.

ஜெயலலிதா, அரசு ஊழியர்களின் இக்கோரிக்கைகளை மனதில் வைத்துத்தான், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய கடந்த 2016-ம் ஆண்டு ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.

ஆனால், அந்தக் குழுவைப்பற்றியும், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் பற்றியும் கொஞ்சம்கூட கவலைப்படாமல், மெத்தனம், அலட்சியம், சுயநலம் என இவை மட்டுமே உலகமாக கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாட்டால்தான், இன்று சென்னையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கொந்தளிக்கும் மனநிலையில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நியாயமான அவர்களின் போராட்டத்தை அடக்குமுறையை ஏவி, அரசு முடக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். கைது நடவடிக்கைகளை கைவிட்டு, உடனடியாக பழனிசாமியின் அரசு இவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும். தவறான அணுகு முறையை இப்பிரச்சனையில் கையாண்டுவரும் பழனிசாமியின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

Related Posts