ஜிஎஸ்டியில் பெட்ரோலியம் பொருட்கள் கொண்டுவரப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது

ஜிஎஸ்டியில் பெட்ரோலியம் பொருட்கள் கொண்டுவரப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று ஜி.எஸ்.டி. குழு தலைவர் சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டபோது, அதற்கேற்றவாறு வரி உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரிதும் சரியாமல், கூடுதலான வரி வருவாயைக் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஈட்டி வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில், பெட்ரோல் விலை தற்போது 80 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்தும், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்க வலியுறுத்தியும் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலியப் பொருட்களை இணைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரிக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில நிதியமைச்சர்களுக்கான ஜிஎஸ்டி குழுவின் தலைவரும், பீகார் துணை முதலமைச்சருமான சுசில்குமார் மோடி, ஜிஎஸ்டியில் பெட்ரோலியப் பொருட்களை இணைத்தாலும் விலையில் மாற்றமிருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Related Posts