ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்து பரபரப்பைக் கிளப்பிய முதியவர்

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்து இரவு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய முதியவர், விடிந்ததும் ஜீவசமாதி முடிவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையைச் சேர்ந்த 71 வயதான முதியவர் இருளப்ப சாமி. இவர் மனைவி மகன், மகள் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். உள்ளூரில் சாமியாராக வலம் வந்த அவர் ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்தார். இதனால் அவரைத் தேடி வந்த ஏராளமான பக்தர்கள் ஆசிபெற்றுச் சென்றனர். இந்நிலையில் இருளப்ப சாமியார் ஜீவசமாதி அடைய குழி வெட்டி பூஜைகள், மலர் அலங்காரம், பந்தல் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. அவரை காண்பதற்காக ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்த சாமியார், நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 6 மணிக்குள் தனது உயிர் பிரிந்துவிடும் என்று அறிவித்தார். பக்தி பாடல்கள் ஒலிக்க விடிய விடிய பூஜைகள் நடத்தப்பட்டு இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவர் பரிசோதனையில் சாமியாரின் உடல்நிலை சீராக இருப்பது தெரிய வந்தது. ஜீவசமாதிக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், தனது முடிவை ஒத்தி வைப்பதாக இருளப்பசாமி இன்று காலை அறிவித்தார். இதையடுத்து இரவெல்லாம் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கலைந்து சென்றனர்.

Related Posts