ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனை

டெல்லி, மும்பை நகரங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. அந்த நிறுவனத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் நிதியை வேறு துறைகளில் முதலீடு செய்ததாகவும், அதில் அந்நியச் செலாவணி விதிமுறைகள், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் வியாழனன்று தீவிர மோசடிக் குற்றங்கள் விசாரணைப் பிரிவினர் ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில்  மும்பை, டெல்லி நகரங்களில் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான பத்துக்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் அல்ட்டாமவுன்ட் சாலையில் உள்ள நரேஷ் கோயலின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Related Posts