டிக்-டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்க  உச்சநீதிமன்றம் மறுப்பு

டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்க கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் டிக்-டாக் செயலி இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பலர் அந்த செயலிக்கு அடிமையாகியுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.  இதனால் பல்வேறு விதமான சமூக சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளதாகவும், இதுபோன்ற சமுதாயத்தை சீர்குலைக்கும் செயலிகளை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு டிக்-டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, டிக்-டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது.. வீடியோ பதிவை முறைப்படுத்துவதாக டிக்-டாக் நிறுவனம் வாக்குறுதி அளித்த நிலையிலும் தடையை நீக்க  மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் ஏப்., 22ம் தேதிக்கு ஒத்திவைத்த்து.

 

Related Posts