டிக் டாக் செயலி மீதான தடையை  நிபந்தனைகளுடன் நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 

டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தடை விதித்து உத்தரவிட்டது.  இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் செயலியே தானாக நீக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதாக டிக் டாக் தரப்பில் வாதிடப்பட்டது. முகநூல்,  வாட்ஸ் ஆப்பைக் காட்டிலும் டிக் டாக்கில் அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்தியாவில் சிறுவர்-சிறுமியர்களை பாதுகாப்பதற்கென சரியான சட்டங்கள் இல்லை என கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில்  மத்திய மின்னணு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குழந்தைகளின் தனி உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்ட முன்வரைவு தயாராக உள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது., அப்போது சிறார் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய மாட்டோம் என  உறுதி மொழி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட டிக் டாக் நிறுவனம்,. இந்தியாவில் இருந்து வரும் புகார்களை விசாரிப்பதற்கு என நோடல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார் என  உறுதி அளித்தது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். அதே நேரத்தில் டிக் டாக் நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை மீறும் பட்சத்தில் உரிமையியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

Related Posts