டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டணம் முறை நடைமுறைக்கு வருகிறது

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் திட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது.

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கு ஏற்படும் நேர விரயம் மற்றும் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகளை களையவே  FASTag எனப்படும் மின்னணு கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வருகிறது. ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையிலான பண பரிமாற்ற ஸ்டிக்கர், வானொலி அலைகள் வாயிலாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர் வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும், இதனை சுங்கச் சாவடிகளில் அமைந்திருக்கும் சென்சார்கள் ஸ்கேன் செய்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும். ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பெறுவதற்கு ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் நகலை கொடுத்து ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பெற்றுக் கொள்ளலாம். இதனை ரீசார்ஜ் செய்து கொள்ள கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, NEFT, RTGS அல்லது நெட்பேங்கிங் மூலம் 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒருலட்சம் ரூபாய் வரை ரீசார்ஜ் செய்ய முடியும்.  இந்த ஸ்டிக்கருக்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற இயலாது, மேலும் ஒரு வாகனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை மற்ற வாகனங்களுக்கும் பயன்படுத்த முடியாது. FASTag ஸ்டிக்கர் ஒட்டாமல் கடக்கும் வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் வாகனங்களில் தப்பிச்செல்ல முயன்றால் அவர்களை எளிதில் பிடிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

Related Posts