டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழு விசாரணை

காவல்துறையில் ஐஜியாக இருக்கும் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறை பெண் கண்காணிப்பாளர் கொடுத்த புகார் குறித்து கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரணை மேற்கொண்டது.

தமிழக காவல்துறையில் அமைக்கப்பட்ட ‘விசாகா குழு உறுப்பினர்க்கள் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ‘காவல்துறையிலேயே விசாகா குழு இல்லையா’ என்று  சுட்டுரைப்பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து காவல்துறை கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் தலைமையில் கூடுதல் இயக்குநர்அருணாச்சலம், காவல்துறை துணைத் தலைவர் தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் கண்கணிப்பாளர் சரஸ்வதி, காவல்துறை இயக்குநர் அலுவலக மூத்தநிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய உறுப்பினர்களை கொண்ட விசாகா குழுவின் முதல் கூட்டம், பட்டினப்பாக்கத்தில் உள்ள மாநில குற்றவியல் ஆவணக் காப்பக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஐஜி ஒருவர் மீது, அதே துறையைச் சேர்ந்த பெண் கண்காணிப்பாளர் ஒருவர் கொடுத்த புகார் குறித்து இந்த கூட்டத்தில் விசாரணை நடைபெற்றது.

Related Posts