டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை : ஜூன்-18

நாடு முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, சுங்கச் சாவடி கட்டண உயர்வு, காப்பீடுத் தொகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். லாரி தொழிலை முடக்கும் வகையிலான பாதிப்புகளைக் களைய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான காய்கறிகள் தேக்கமடைந்து, ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தென்மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று அறிவித்துள்ளனர்.

Related Posts