டெங்குவைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை அளிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

டெங்குவைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதுடன், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாவதாக குறிப்பிட்டுள்ளார். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது, சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் வாயிலாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் குற்றம்சாட்டினார். இதைக் கேட்ட நீதிபதிகள், நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா எனக் கேள்வி எழுப்பியதுடன், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூக கடமை என சுட்டிக்காட்டினர். டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Posts