டெங்கு காய்ச்சல் பாதிப்பு : மருத்துவமனைகளில் 135 பேர் அனுமதி

டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை அரசு மருத்துவமனைகளில் 135 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாட்களில் டெங்கு காய்ச்சலால் சென்னை மதுரவாயலை சேர்ந்த லோகித் என்ற 8 மாத குழந்தையும், முகப்பேரை சேர்ந்த மகாலட்சுமி என்ற 6 வயது சிறுமியும் உயிரிழந்தனர். மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்ணும் உயிரிழந்தார். இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 7 பேர், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 107 குழந்தைகள் என டெங்கு காய்ச்சலுக்கு மொத்தம் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே  சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயாராக உள்ள நிலையில், மருத்துவமனைக்கு நள்ளிரவில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Related Posts