டெல்லியில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்:  உயர் அதிகாரிகளுடன் சுமித்ரா மகாஜன் நேற்று ஆலோசனை 

நாடாளுமன்ற மக்களவைக்கு கடந்த ஏப்ரல், 11ந் தேதி தொடங்கி வரும்  மே 19 வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை  மே 23ல் நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்’ என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், 17வது மக்களவை  பொறுப்பேற்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்ய, உயர் அதிகாரிகள் கூட்டத்தை, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நடத்தினார்.

கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக பொறுப்பேற்க உள்ள, 17வது மக்களவைக்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளதாக தெரிவித்தார். முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்பவர்களுக்கு, விதிமுறை மற்றும் அரசியல் சாசன புத்தகங்கள் வழங்கப்படும் என அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் தனி வரவேற்பறை உருவாக்கப்படும் எனவும் நாடாளுமன்ற வளாகத்தில், 24 மணி நேர சேவை மையம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லம் தயாராகும் வரை, டில்லியில் அவர்கள் தங்குவதற்கு, 300 தற்காலிக அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தான், 30 ஆண்டுகளாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் இந்த சபை, தன் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Posts