டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

 

டெல்லிக்கு நாளை செல்ல உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி, மே-01 

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.  மேலும் நாளை மறுநாளுக்குள் வரைவு அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளார். நாடுமுழுவதும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின விழாவை கொண்டாட பிரதமர் மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக நாளை காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல உள்ள  முதலமைச்சர், மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அன்று இரவு டெல்லியில் தங்கும் அவர், மறுநாள் காலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி பயணத்தின்போது, பிரதமர் மோடியை தனியாக சந்திக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளார். அப்போது,காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து தமிழகத்தின் தேவைகளை மனுவாக அளிக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அங்கு அவர் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு இல்லத்தில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஆஜராக உள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

Related Posts