டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய கேரளா முதல்வர்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய கேரளா முதல்வர், வெள்ள பாதிப்புகளுக்கு 4 ஆயிரத்து 796 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

        கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, மத்திய அரசு சார்பில் மேலும் 600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த பினராயி விஜயன் சிகிச்சைக்கு பிறகு அவர் கேரளா திரும்பினார். இதைதொடர்ந்து டெல்லி சென்ற பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு 4 ஆயிரத்து 796 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக கேரள அரசுக்கு வழங்கும் படியும் அவர் கோரிக்கை விடுத்தார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Posts