டெல்லி அதிகார மோதல் வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதையடுத்து,வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. பல்வேறு விஷயங்களில் இரு தரப்பும் தங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது என மோதலில் ஈடுபட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். தீர்ப்பில், இணைச்செயலாளர் மற்றும் அந்த அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உண்டு என நீதிபதி சிக்ரி தெரிவித்துள்ளார். இணைச்செயலாளர் அந்தஸ்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருவார்கள் என அவர் கூறியுள்ளார். அதேபோல ஊழல் தடுப்பு பிரிவு, விசாரணை ஆணையம் ஆகியவையும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்திற்குள் தான் வரும் என எனவும், காவல்துறை தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுக்கு இல்லை என்றும்நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால் மற்றொரு நீதிபதியான அசோக் பூஷண் இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். இதன் காரணமாக இவ்வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts