டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறும் ரவிச்சந்திரன் அஸ்வின்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வின் பஞ்சாப் கேப்டனாக இருந்த 28 ஆட்டங்களில், அந்த அணி 12-ல் வெற்றியும் 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. கடந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடமும் இந்த வருடம் 6-ம் இடமும் பிடித்தது. இதனால் இந்த வருடம் புது அணி, புதிய பயிற்சியாளர்கள், புது கேப்டனுடன் களமிறங்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் அஸ்வினை வேறொரு அணிக்கு விட்டுக்கொடுக்கவும் அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். மைக் ஹஸ்ஸன் தலைமையிலான பயிற்சியாளர்களையும் பஞ்சாப் அணி நிர்வாகம் நீக்கிவிட்டது. இந்தத் தகவல் கேள்விப்பட்டவுடன் தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அஸ்வினைத் தங்கள் அணிக்குத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி வென்றுள்ளதாகத் தெரிகிறது. 139 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அஸ்வின் தேர்வாகியுள்ள செய்தி, விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts