டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் மக்களவை உறுப்பினர் ராம் சந்திர பஸ்வான் ஆகியோரின் மறைவுக்கு மக்களவையில் இரங்கல்

மக்களவை உறுப்பினர் ராம் சந்திர பஸ்வான் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரின் மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி முன்னாள் முதலமைச்சரும்  மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஷீலா  தீட்சித் நேற்று முன்தினம் காலமானார். இதேபோல் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரரும் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான  ராம் சந்திர பஸ்வான் நேற்று இயற்கை எய்தினார்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம்  இன்று காலை கூடியதும், ஷீலா தீட்சித் மற்றும் ராம் சந்திர பஸ்வான் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை வாசித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா,  இருவரின் மறைவுக்கும் மக்களவை ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். அப்போது,உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராம் சந்திர பஸ்வான்,நான்காவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஷீலா தீட்சித் 1984 முதல் 1989 வரை டெல்லி கன்னொஜ் மக்களவையின்  தொகுதி உறுப்பினராக பணியாற்றினார்.இதனை தொடர்ந்து  டெல்லி சட்டசபைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக பதவி வகித்தார். பின்னர் அவர்  கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Posts