டெஸ்லா நிறுவனத்தை பார்வையிட்ட முதலமைச்சர்

அமெரிக்காவில் டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அந்நிறுவனம்  தொழிற்சாலையை தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா கார் நிறுவனம் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனமாகும். மின்சாரக் கார் உற்பத்தியில் டெஸ்லா முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்டார். அவருக்கு மின்சாரக் கார் தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதனைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்க அவர் அழைப்பு விடுத்தார். பல்வேறு தனியார் நிறுவனங்கள் மக்களின் போக்குவரத்து சேவையை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அந்த வகையில் டெஸ்லா கார் நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால் தமிழக அரசு சார்பாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார். டெஸ்லா நிறுவன அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு முதலமைச்சரும், முதலமைச்சருக்கு டெஸ்லா நிறுவனத்தினரும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் மொத்தம் 5ஆயிரத்து 80 கோடி ரூபாய் தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நிதித் துறை, ஐடி துறை, மருந்து தயாரித்தல் துறை, வேதியியல் துறை, சுகாதாரத் துறை, சைபர் பாதுகாப்புத் துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

Related Posts