தகவல் தொழில்நுட்பச் சாதனங்களில் ஊழல் : மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டு

தமிழக காவல் துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நிகழ்ந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காவல் துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டெல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதல் செய்யும் 350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 88 கோடி ரூபாய் வாக்கி டாக்கி ஊழலில் நடைபெற்ற 11 விதிமுறை மீறல்களை உள்துறை செயலாளர் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியை குறிப்பிட்டுள்ள அவர், அதனை அதிமுக அரசு மூடி மறைத்ததாகவும் சாடியுள்ளார். அதன் தொடர்ச்சியாகதான் 350 கோடி ரூபாய் ஊழலும் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். குட்கா வழக்கில் குறிப்பிடப்படும் காவல்துறை தொழில்நுட்ப பிரிவின் எஸ்.பி அன்புச் செழியன், முன்னாள் டி.ஜி.பியாக இருந்த டி.கே.ராஜேந்திரனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு காவல்துறை டெண்டர்களை முடிவு செய்ததாக தெரிவித்துள்ள ஸ்டாலின், வி-லிங் என்ற நிறுவனத்துக்கு இந்த டெண்டரிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக டிஜிட்டல் மொபைல் ரேடியோவிற்கான 16 மாவட்ட டெண்டரில் 10 மாவட்ட டெண்டர்கள் இந்த கம்பெனிக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.  அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், புலனாய்வு பணிகளில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் டி.எஸ்.பிக்களுக்கு வாகன வசதி கூட இல்லை எனத் தெரிவித்துள்ளார். வாகன பற்றாக்குறையால் ஒட்டுமொத்த புலனாய்வு பணிகளும் தடைபட்டு நிற்கும் நிலையில், காவல்துறை நவீனமயமாக்கலுக்கு ஒதுக்கப்படும்  நிதியில் ஊழல் நடைபெற்றிருப்பது முதலமைச்சருக்கு வெட்கமில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  முதலமைச்சரே ஊழல் புகாருக்கு உள்ளாவதும், அமைச்சர்களின் ஊழல் புகார்களை எல்லாம் மூடி மறைக்கும் காரியத்தில் விஜிலென்ஸ் துறை தீவிரமாக ஈடுபட்டதுமே, இந்த ஊழலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் துறையில் நடைபெற்றுள்ள ஊழல் என்பதால், இது தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts