தகுதி நீக்க வழக்கு: ஓபிஎஸ் உள்பட 11 பேர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

 

 

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால், 11 பேரும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லி, மே-01 

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவருக்கு எதிரான அணியில் இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க. கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான சக்கரபாணி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தி.மு.க  தரப்பில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறப்பட்டது. எனவே, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளனர். அதில் தகுதிநீக்கம் தொடர்பாக யாராவது மனு தாக்கல் செய்தால், தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts