தனிப்பட்ட குற்றத்திற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா?

தனிப்பட்ட குற்றத்திற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, மத்தியப்பிரதேசம் உள்பட நான்கு உயர்நீதிமன்றங்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடக்கோரும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரணைக்கு ஏற்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தீபக் குப்பா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேஸ்புக் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல், குற்றம் என்பது நிச்சயமாக சமூக வலைதளம் மூலம் ஏற்படுவது இல்லை என குறிப்பிட்டதுடன், அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றார். 4 உயர்நீதிமன்றங்களும் வெவ்வேறு தீர்ப்புகள் அளித்தால், இந்த வழக்கில் நிரந்தர தீர்வு கிடைக்காது என்பதும் அவரது வாதம். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ப்ளூ வேல் கேம்-மிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை இதற்கும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுக்க ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக வேண்டும் என்று அவர் கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பியது. வழக்கு தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும், மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Posts