தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஊக்கத்தொகை நிறுத்தக்கூடாது

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை நிறுத்தக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : மே-30

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மெரிட் அடிப்படையில் இடம் கிடைக்காதபோது, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து பயிலுவதாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய மாணவர்கள், கல்வி உதவித் தொகை மூலம் பலனடைந்து, கல்லூரி படிப்பை தொடர்ந்து வருவதாகவும், இதனால், மேல்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை நிறுத்தினால், உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், சமூகநீதியை அடைவதில் பின்னடைவு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை வழங்குவதில், மத்திய அரசு கொண்டுவந்த மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர், கல்வி உதவித்தொகையில் மத்திய அரசின் பங்களிப்பான ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கல்வி உதவித்தொகையில் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதாச்சார பங்களிப்பே தொடர வேண்டும் என்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.       

Related Posts