தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறையாது: பிரதமர் மோடி உறுதி

 

 

தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறையாது  என சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.  

சென்னை, ஏப்ரல்-12

சென்னை அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்றடைந்த மோடி, ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். விழாவில் ‘காலை வணக்கம்’ என தமிழில் பேசி உரையை தொடங்கிய மோடி, போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வது விட, மக்கள் மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா  நம்பிக்கை வைத்துள்ளது என்றார். அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, தமது உரையை முடிப்பதற்கு முன்னர் தொட்டனைத்தூறும் மணற்கேணி என்ற திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ தளவாட கண்காட்சியை தமிழகத்தில் நடத்தியற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது  மோடி பேசியதாவது ;-

இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளில், புற்றுநோய் சிகிச்சை பிரதானமாக இருக்கும்  . நோய் தடுப்பு வசதிகளை வீட்டின் அருகே அமைத்து தருவதே அரசின் மருத்துவக் கொள்கை; தமிழக முதல்வரோடு ஆலோசித்து மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும். தமிழகத்திற்கு நிதியை குறைத்துவிட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது . நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளப்படும். நாம் எல்லோரும் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்குவோம்; அதுவே நம் விடுதலை போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் 
இவ்வாறு மோடி கூறினார்.

இந்த விழாவில் பேசிய சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா, மருத்துவமனை விரிவாக்கத்துக்கு தேவையான நிலம் பெற்றுத்தர ஏற்பாட செய்யும்படி கோரிக்கை விடுத்தார்.

Related Posts