தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊடுருவியுள்ள 6 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை கூறியுள்ளது. இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி கோயில் திருவிழா மற்றும் விநாயகர் சதூர்த்தி வருவதாலும் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts