தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 4 டிஎம்சி நீரை உடனே வழங்க வேண்டும்

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யவில்லை. பிரதமர் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

டெல்லி : மே-03

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக மே 3-ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை இந்த பிரச்சனையை இழுத்தடிக்க மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில், காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.மத்திய அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராகி விளக்கம் அளித்தார். காவிரி வரைவு செயல் திட்டம் தயாராகிவிட்டது என்றும் பிரதமர் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்றும் விளக்கமளித்தார். ஆகையால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும், இதில் அரசியல் காரணம் உள்ளதா என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.

 இதையடுத்து, காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அதேசமயம்,  தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Posts