தமிழகத்திற்கு விரைவில் 150 கம்பெனி ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வந்து, மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்து அதிகாரிகளுடன் 3 நாள் ஆலோசனை நடத்திவிட்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் பண நடமாட்டம் மற்றும் பண பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இது சம்பந்தமாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதாகவும், வருமான வரித்துறை அதிகாரிகள் மட்டும் இதுவரை 45.57 கோடி பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுதவிர பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் 94.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரி இருந்த்தாகவும், 160 கம்பெனி வீரர்கள் மட்டுமே தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் இதில் 10 கம்பெனி வீரர்கள் ஏற்கனவே வந்து பறக்கும் படையினருடன் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும் மீதமுள்ள 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகிற 16ம் தேதிக்குள் தமிழகம் வருவார்கள் என அவர் தெரிவித்தார்.

Related Posts