தமிழகத்திற்கு 25ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

தமிழகத்திற்கு 25ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெருங்காளூர், ஆதனக்கோட்டை, சோத்துப்பாறை,சொக்கநாதம்பட்டி,கந்தர்வக்கோட்டை உள்ளிட்டப் பகுதிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நேரில் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதை உயர்த்தி 20 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தென்னை, வாழை, பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை ஏற்க தக்கது அல்ல என்ற வைகோ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயமே தெரியாதா என கேள்வி எழுப்பினார்.

மத்திய குழு ஆய்வுத் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வைகோ, மத்திய குழு ஒரு அயோக்கிய குழு என்றார். புயல் சேதம் குறித்த அறிக்கையை தயாரித்துள்ளதாகவும், இதன்படி தமிழகத்திற்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் தவறினால் தமிழகத்திற்குள் மோடியை விடமாட்டோம் எனவும் கூறினார். தமிழக அரசு முதுகெலும்பில்லாத அரசு எனவும் முதல் அமைச்சரின் முதுகெலும்பு காணாமல் போய் 2வருடங்கள் ஆகிறது எனவும் வைகோ சாடினார்.

Related Posts