தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு  பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. உதகையில் நஞ்சநாடு, இத்தலார், எம்ரால்டு போன்ற பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இதேபோல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதி, ராதாபுரம், வடக்கன் குளம், பழவூர் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டது.  கொடைக்கானலில் 2 மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக அப்ஸர்வேட்டரி சாலையில் 5க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகள், திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம்  குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகத்தில் இன்று சில இடங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 12 சென்டிமீட்டரும், நாமக்கல்லில் 8 சென்டிமீட்டரும்,கன்னியாகுமரி, கோதையாறில் 7 சென்டிமீட்டரும், , திண்டுக்கல் மாவட்டத்தில் 6 சென்டிமீட்டரும், , மஞ்சளாறு 5 சென்டிமீட்டரும்., வேடசந்தூர் 4 சென்டிமீட்டரும்  மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts