தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் கையிருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசிடம் நிலக்கரி கேட்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் நிலக்கரி வழங்க  மத்திய அரசும் சம்மதித்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் மழை காரணமாக மின் தேவை குறைந்திருப்பதால் உற்பத்தியையும் குறைக்கப்பட்டிருப்பதாகவும், வடசென்னையில் 3 நாட்களுக்கான  நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒடிசாவில் ஏற்பட்ட மழை காரணமாகவே கடந்த வாரத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்து வருவதாகவும், தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது எனவும் அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Posts