தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது: அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிக்கான தேர்தலும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. இதில், 39 மக்களவை தொகுதியில் மட்டும்845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல்,  18 சட்டப்பேரவை தொகுதி  இடைத்தேர்தலில் 269வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரனின் அமமுக, நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன.அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். . குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திமுக கூட்டணி கட்சிக தலைவர்களான வைகோ, முத்தரசன்,  பாலகிருஷ்ணன், திருமாவளவன், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களான ராமதாஸ், பிரேமலதா, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும்,  அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். . இதேபோல், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சேலம், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை ஆகிய தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  இந்நிலையில், தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் பிரசாரம் செய்ய  இரு நாட்களே உள்ளதால் தமிழகத்தில் தற்போது கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts