தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன்  ஓய்கிறது

மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரமாக  பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில்

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது எனவும் தேர்தல் தொடர்பான எந்த பிரசார காட்சிகளையும் ஊடகங்களின் வாயிலாக வெளியிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். குறுஞ்செய்தி, இணையதளம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பும் அதில் அடங்கும் எனவும்,  விதிகளை மீறினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம், இவையிரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில், நாளை மாலை 6மணி முதல் 18ம் தேதி வாக்குப்பதிவு முடிவு வரை பரப்புரை செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்,

தொகுதிக்குத் தொடர்பில்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அந்தந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அவர் கெடு விதித்துள்ளார்.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு எந்த வேட்பாளரும் அனுமதி தரக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.  தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 67 ஆயிரம் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும், வரும் 18-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் செல்லிடப்பேசியைக் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,

வாக்குச் சாவடிக்குள் செல்ஃபி போன்ற புகைப்படங்கள் எதையும் வாக்காளர்கள் எடுக்கக் கூடாது எனவும் இரண்டு நபர்களைக் கொண்ட வேட்பாளர்களின் தற்காலிக அலுவலகம் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதேசமயம், அங்கு தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும்  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

 

 

Related Posts