தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத ஆட்சி ஜனநாயகத்தின் குரலை நசுக்குகிறது

தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத ஆட்சி ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தி கலவரம் ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கு மேலாக சிறையில் இருந்த அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளில் நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வேலூர் சிறையில் இருந்து இன்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறைவாசலில் அவரை மே 17 இயக்கத்தினர் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, மத்திய பாஜக அரசின் உத்தரவை எடப்பாடி அரசு பின்பற்றுவதாகவும்,  தமிழகத்தில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இங்கு அரசியல் சாசனத்திற்கு விரோதமான அரசு நடைபெறுவதாகவும்,, இந்த அரசு, சட்டத்தை மீறும் பாஜகவினரை கைது செய்வதில்லை எனவும் அவர் கூறினார்.  மத்தியில் ஆளும் பாஜக அரசு தான் தமிழகத்தை சீரழித்து வருவதாகவும், மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Related Posts