தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்தாலும், மாலை வேளைகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், தியாகராய நகர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் கனமழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மேலும், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை, போரூர் மற்றும் கொளத்தூரிலும் கனமழை பெய்துள்ளது. மேலும் பல இடங்களில் லேசான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. அதேபோல்,  புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய  மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லப்புரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related Posts