தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும்: பெங்களூரு போலீஸுக்கு மர்ம நபர் தகவல் 

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  5 நட்சத்திர விடுதிகள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்களுள் 2 பெண்கள் உட்பட 9 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்புவில் பல்வேறு முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன. . மேலும் இலங்கையில் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டுகள் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில், அந்நாட்டு ராணுவம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர் போனில் பேசி திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான நகரங்களில் குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் இதற்காக நுழைந்துள்ளார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவலை கூறிவிட்டு, அந்த மர்ம நபர் போனை வைத்துவிட்டார்.

இந்த தகவலையொட்டி, பெங்களூரு போலீசார் தமிழ்நாடு உள்ளிட்ட மேற்கண்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பினார்கள். இந்த தகவலை முக்கியமான தகவலாக கருதி, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெங்களூரு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Related Posts