தமிழகத்தில் வரும் 7ம் தேதி அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 7ம் தேதி அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால், அன்றைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்துக்கு அக்டோபர் 7ம் தேதி ரெட் அலர்ட் அளித்திருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 7ம் தேதி 25 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறைந்த நேரத்தில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் காலங்களைக் கையாள தமிழகத்தில் சுமார் ஆயிரத்து 275 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நாளை முதல் 7ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். சென்ற முறை சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாக இருந்தது எனவும், இந்த முறை பலத்த மழையே வந்திருக்கிறது எனவும் அவர் கூறினார். குறிப்பாக நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புண்டு எனவும் அவர் குறிப்பிட்டார். இந்திய பெருங்கடலிலும், வங்க கடலில் கன்யாகுமரிக்கு அருகிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது அரபிக்கடலுக்கு நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

Related Posts