தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

         இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடங்கி, தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் நேற்று ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக கூறியுள்ளார்.

         தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி,22 ஆண்டு காலமாக அந்தப் பகுதி மக்களின் உடல் நலத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகின்ற வேதாந்தா குழுமத்திற்கு, தமிழ்நாட்டில் இரு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகளும் தமிழக மக்களும் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வலிந்து செயல்படுத்த முனைந்து இருப்பது தமிழ் நாட்டின் மீது உள்ள மோடி அரசின் வன்மத்தைப் பறை சாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோகார்பன், ஷெல் கேஸ் எனப்படும் பாறை படிம எரிவாய்வு உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளாகக்  காவிரி தீரத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் போராடி வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டக்களத்தில் இறங்கினர் எனவும்,  ஆனால் தமிழக மக்களின் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவது என மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்..

         கர்நாடக மாநிலம், காவிரியில் தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து அடாவடியாக இருப்பதால் முன்பு 28 லட்சம் ஏக்கராக இருந்த விவசாய பரப்பு தற்போது 15 லட்சம் ஏக்கராக சுருங்கி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

         ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை கொண்டு வந்து காவேரி பாசனப் பகுதி மக்களை பஞ்சத்தில் தள்ளி வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த மண்ணை விட்டு ஏதிலிகளாக இடம்பெயரச் செய்ய மத்திய பாஜக அரசு சதிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

         மோடி அரசின் இத்தகைய தமிழ்நாட்டு விரோத அநீதியான நடவடிக்கைகளுக்குத் துணை போய்க் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உறுதியாக எதிர்க்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வைகோ,. வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால், அதை எதிர்க்க மக்களுக்கு துணிவு வரக்கூடாது என்பதற்காகத்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதம் ஏவப்பட்டதோ? என்ற ஐயம் எழுவதாக தெரிவித்துள்ளார்.

         மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் எனவும், தவறினால், வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டி வரும் எனவும் அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

Related Posts