தமிழகம் மற்றும் புதுச்சேரில் நாளை வாக்குப்பதிவு 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள், தமிழகத்தில் உள்ள 18 மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 845 பேரும், இடைத் தேர்தலில் 269 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 67 ஆயிரத்து 720 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமானவை என  கண்டறியப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தும், வெப்காஸ்டிங் முறை மூலம், நேரடியாக கண்காணிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

வாக்குப் பதிவு மையங்களில் 15 ஆயிரத்து 302 வாக்கு பதிவு எந்திரங்களும், 89 ஆயிரத்து 160 வாக்குபதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 94 ஆயிரத்து 653 ஒப்புகை சீட்டு எந்திரங்களும் வைக்கப்பட்ட உள்ளன. தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்ய பிரதா சாகு தெரிவித்தார். யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள உதவும் விவிபேட் எந்திரத்தில், கட்சி சின்னம் மாறி வந்தால் உடனடியாக அங்குள்ள வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என சத்யபிரதா சாகு கேட்டுக்கொண்டுள்ளார். வாக்கு எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை, வாக்காளர்கள், 1950 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.  தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் 14 ஆயிரத்து 400 பேர் உட்பட, ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 633 பேர் ஈடுபட உள்ளனர்.

Related Posts