தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையம், நெக்ஸ்ட் தேர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவர்கள்  ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் நெக்ஸ்ட் தேர்வும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இதுவரை மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் ஓராண்டு பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் பிறகு, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்து மருத்துவராகப் பணியாற்றலாம். முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இவை இரண்டுக்கும் இனி நெக்ஸ்ட் தேர்வு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்  மற்றும் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச் செயலாளர்  ரவீந்திரநாத், மத்திய அரசின் புதிய மருத்துவ கொள்கையால் தற்போதைய அறிவியல் ரீதியான மருத்துவம் அழிக்கப்பட்டு முற்காலத்து மூடநம்பிக்கை மருத்துவத்தை புகட்டும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். தேசிய மருத்துவக் கொள்கை   அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் தவறினால் போராட்டம் மேலும் வலுவடையும் என்றும் அவர் எச்சரித்தார்.

Related Posts