தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை : ஏப்ரல்-05

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், தொமுச உள்பட 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் ஆட்டோ தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னையில் தியாகராய நகரில் சுமார் 5 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தியாகராயர் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், மருந்தகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தியாகராய நகரில் சுமார் 60 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. ஆனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்குகள், மருந்துக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில், மாநகர அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம், கடைவீதி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

சத்தியமங்கலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல், தினசரி காய்கறி மாக்கெட்டும் மூடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடினாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

மதுரையில், மீனாட்சி பஜார், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், 70 சதவீதம் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 18 ஆயிரம் கடைகள் மற்றும் 350 மருந்தகங்களை அடைத்து, மத்திய அரசுக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தருமபுரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், கயத்தார், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீத வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. 

திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், 50 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

 

Related Posts