தமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து,  தமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை : மே-24

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால், 12 பேர் உயிரிழந்தனர். மேலும், காவல்துறையினர் நடத்திய தடியடியில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அழைப்பின் பேரில், தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, அப்பகுதியில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களும் கடலுக்கு செல்லாமல், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை கண்டிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ள அச்சிறுப்பாக்கத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

இதேபோல், மதுரை, சேலம், கோவை, நாமக்கல் உட்பட தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Posts