தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு

தமிழகத்துக்குள் நாசவேலைகளைச் செய்ய பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியின் பெயர் இலியாஸ் அன்வர் என்பதும் அந்த எச்சரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதியை வைத்துக் கொண்டு இந்துக்களை போல காட்டிக் கொண்டு ஊடுருவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இந்துக் கோயில்கள் தேவாலயங்கள் மசூதிகள் போன்ற இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் கோவையை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இந்திய – இலங்கை கடல் எல்லைப் பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதியில் தமிழக கடலோர காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts