தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களில் பொது மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் அளித்தனர்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக,செப்டம்பர் 9, 23 ஆகிய தேதிகளிலும் அக்டோபர் 7, 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடி அமைவிடங்களிலேயே நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் 3 ஆயிரத்து 754 வாக்குச் சாவடி மையங்களில், காலை 9.30 மணி அளவில் சிறப்பு முகாம்கள் தொடங்கின. இதில் பொது மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலுவலரிடம் அளித்தனர்.  மாலை 5.30 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பெயர் சேர்க்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மற்ற நாட்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, அல்லது இணையதளம் மூலமோ விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி முதல் வாரம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Related Posts