தமிழகம் முழுவதும் ரத்த தானம் செய்த 20 ஆயிரம் காவல்துறையினர்

தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் ரத்த தான செய்தனர்.  சென்னையில் ரத்த தான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை : ஜூன்-29

தமிழகம் முழுவதும் முதல்முறையாக ஒரேநாளில் 20 ஆயிரம் காவல்துறையினர் இன்று ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், அன்பழகன், பெஞ்சமின் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று மட்டும் காவல்துறையினர், 20 ஆயிரம் யூனிட் ரத்தம் வழங்க உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு மாதத்திற்கு 33 ஆயிரம் முதல் 35 ஆயிரம் யூனிட் வரை ரத்தம் தேவைப்படுவதாக கூறிய விஜயபாஸ்கர், முகாம்கள் மூலம் தானமாக பெறப்படும் ரத்தம் பாதுகாப்பான முறையில் ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படும் என தெரிவித்தார்.

இதேபோல், இன்று தமிழகம் முழுவதும், காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் பங்கேற்று ரத்த தானம் செய்கின்றனர். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தாராபுரம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரத்த தானம் செய்து வருகின்றனர். (FTP)

Related Posts