தமிழக அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி

வேலூர் நாராயணபுரத்தில், சாதியை காரணம் காட்டி, பாலத்தில் இருந்து சடலம் இறக்கப்பட்டது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியன் பிரசாத் அமர்வு, ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி மருத்துமனை, காவல்நிலையங்கள் இல்லாதபோது, மயானத்தில் மட்டும் சாதி பார்ப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். பட்டியல் இன மக்களுக்காக தனி மயானம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் தனி இடம் ஒதுக்கியதற்காக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசே இதற்கு உடந்தையாக இருக்கிறதா என வினவினர்.  வேலூர், நாராயணபுரத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் வழிகளை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இறப்பில் சாதி பார்ப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாக தெரிவித்தனர். இதனை  சாதாரண வழக்காக கருத முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அனைத்து சமூகத்திற்கும் பொதுவான மயானம் அமைப்பது குறித்து, வரும் புதன்கிழமைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Related Posts