தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : மே-03

அண்ணா பல்கலைக்கழகத்தில் இனி ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கான விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கடந்த நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்து திமுகவின் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன் உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பத்தையும், கலந்தாய்வையும் ஆன்லைனில் மட்டும் வைத்தால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும், கணினி தொடர்பான அறிவு குறைவாக உள்ள மாணவர்களுக்கு இந்த கலந்தாய்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு குறித்து தமிழக அரசோ, அண்ணா பல்கலைக்கழகமோ எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விளக்கத்தை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Posts