தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – திருநாவுக்கரசர்

தமிழகத்தில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று  நடைபெற்றது.இதில், மறைந்த கருணாநிதிக்கும்,கேரளாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக,  காங்கிரஸ் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் பணி  நாளை தமிழகம் முழுவதும் தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.

மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியும், கடைமடைப் பகுதியான பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை என குறிப்பிட்ட அவர், நீர்நிலைகள் தூர்வார பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறும் தமிழக அரசு, அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கேரள மாநிலத்துக்கு தற்போது பிரதமர் அறிவித்துள்ள நிதி போதுமானது அல்ல எனவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related Posts