தமிழக எல்லைக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருல்  3 மாநில காவல்துறையினர்  தீவிர தேடுதல் வேட்டை

தமிழக எல்லைக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து 3 மாநில காவல்துறையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக எல்லைக்கருகே  கேரள மாநிலத்துக்குள் தற்போது முகாமிட்டுள்ள மாவோயிஸ்டுகள் ஜூலை கடைசி வாரத்தில் தங்களது குழுவிலிருந்து உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக எல்லையில்  மாவீரர் தினத்தைக் கொண்டாட உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் தமிழக எல்லைக்குள் குவிய உள்ளதாகவும் மத்திய உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து 3 மாநில காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டனர். மேற்கு மண்டல காவல் துறை  தலைவர் பெரியய்யா, அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் தலைமையில்  6 குழுக்கள் அடங்கிய அதிரடிப் படையினர்  கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக – கேரள எல்லையோரப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து கிடைத்த தகவலின்பேரில் இது வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, தலைமையிலான ஒரு குழுவினர் மட்டும்  கடந்த 25 ஆம் தேதி இரவு உதகைக்குத் திரும்பிவிட்டனர்.

இருப்பினும் எதிர்பாராத சம்பவங்கள் ஏதாவது நடக்கலாம் என உளவுத் துறையிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கேரளம்,கர்நாடகம்,உள்ளிட்ட தமிழக எல்லைகளை உள்ளடக்கிய பகுதிகளில் 5 குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையிலும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபடும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

Related Posts