தமிழக கிராமங்களில் மின்வெட்டு இருப்பதை மின்துறை அமைச்சரால் மறுக்க முடியாது

 தமிழக கிராமங்களில் மின்வெட்டு இருப்பதை மின்துறை அமைச்சரால் மறுக்க முடியாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

      சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமெரிக்காவில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இளம் அரசியல் தலைவர்களுக்கான மாநாட்டிற்கு   இந்தியாவில் இருந்து 8 இளம் அரசியல் தலைவர்களை அமெரிக்கா தூதரகம் தேர்வு செய்துள்ளதாகவும், அதில் தமாக இளைஞர் அணி தலைவர் யுவராஜாவும் இடம் பெற்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.. எதிர்கால அரசியலில் இளைஞர்களின் பங்கு மிகவும் தேவையானது எனவும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

      தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் எங்குமே மின்வெட்டு கிடையாது என துறை சார்ந்த அமைச்சர் கூறினாலும் இன்னும் கிராமங்களில் மின்வெட்டு இருப்பதை மறுக்க முடியாது என்றார். இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளதாகவும், இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எட்டு வழி சாலையை ஆறு வழி சாலையாக மாற்ற திட்டமிட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது எனவும் இது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொருத்தவரை, மக்கள் நலனில் அக்கறையுடன் மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் எனவும் இதனை வலியுறுத்தி நாளை சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமாக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Related Posts